தே.ஜ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர், ராணுவத்துக்கு பாராட்டு
புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தையும், ஆயுதப்படைகளின் ஈடற்ற துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்தக் கோருவதன் மூலமாக தவறிழைத்துவிட்டோமா என்று எதிர்க்கட்சிகள் யோசிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அரசியலமைப்பை உண்மையான உணர்வில் பின்பற்றி வருகிறது” என்று குறிப்பிட்டார்.