ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கடற்படை வீரரின் மனைவி கொடூர கொலை: டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு பதிவு
எட்டாவா: பயணச்சீட்டு தகராறில் கடற்படை வீரரின் மனைவியை ஓடும் ரயிலில் இருந்து டிடிஇ தள்ளிவிட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா அருகே கடந்த 26ம் தேதி ரயில் தண்டவாளத்தில் ஆர்த்தி யாதவ் என்ற பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். பாட்னாவிலிருந்து ஆனந்த் விஹார் செல்லும் சிறப்பு ரயிலில் பயணம் செய்த இவருக்கும், ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகருக்கும் (டிடிஇ) இடையே ஏற்பட்ட தகராறில், அப்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து டிடிஇ தள்ளிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
கடற்படை வீரரின் மனைவியான இவரது மரணம் தொடர்பான விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், ‘டிக்கெட் விவகாரத்தில் ஆர்த்தியின் உடமைகளை முதலில் வெளியே வீசிய டிடிஇ, பின்னர் அவரையும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இதை மறுத்துள்ள டிடிஇ சந்தோஷ் குமார், ‘பயணச் சீட்டு மாறி இருந்ததால் பொதுப் பெட்டிக்குச் செல்லச் சொன்னபோது அவரே குதித்துவிட்டார்’ என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே பெண்ணின் கைப்பையும் உடலும் வெகுத் தொலைவில் வெவ்வேறு இடங்களில் கிடந்ததால், இது திட்டமிட்ட செயல் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து டிடிஇ சந்தோஷ் குமார் மீது கொலைக் குற்றம் அல்லாத மரணத்தை விளைவித்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.