நவராத்திரி விழாவை முன்னிட்டு வடமாநிலங்களுக்கு செல்லும் ஜவ்வரிசி: சேகோ ஆலைகளில் உற்பத்தி தீவிரம்
சேலம்: நவராத்திரி விழாவை முன்னிட்டு சேலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு அனுப்ப சேகோ ஆலைகளில் ஜவ்வரிசி உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் சேலம், நாமக்கல்லில் உள்ள சேகோ ஆலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பு கின்றனர்.
சேகோ ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தி செய்யப்படுகிறது. ஜவ்வரிசி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் வடமாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் வரும் 22ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. இதையொட்டி சேலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு ஜவ்வரிசியை அனுப்ப சேகோ ஆலைகளில் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது.
இதுகுறித்து சேலம் சரகத்தை சேர்ந்த சேகோ ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது: சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய சேகோ ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசியில் 30 சதவீதம் தமிழகத்திற்கும், 70 சதவீதம் குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
நவராத்திரியை முன்னிட்டு சேலத்தில் இருந்து கடந்த இரு வாரமாக வட மாநிலங்களுக்கு ஜவ்வரிசி அனுப்பப்படுகிறது. அடுத்த வாரத்தில் சேலத்தில் இருந்து தினசரி 50 முதல் 100 டன் அளவுக்கு ஜவ்வரிசி மூட்டைகள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.