ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட்ட நவிமும்பை விமான நிலையம் திறப்பு: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
நவி மும்பை: மகாராஷ்டிராவில் 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வருகை தந்தார். நவி மும்பைக்கு நேற்று வந்த பிரதமர் நரேந்திர மோடி நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார். நவிமும்பை விமான நிலைய கட்டிடத்தின் முதல் கட்டம் ஆண்டுக்கு 2 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. இந்த புதிய முனையம் மும்பையின் தற்போதைய சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் விமான போக்குவரத்து நெரிசலை குறைத்து மும்பை பெருநகரப் பகுதியை இந்தியாவின் முதல் இரட்டை விமான நிலைய மையமாக மாற்றும். இந்த விமான நிலைய முனையம் ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட்டது.
நாட்டின் முதல் முழுமையான டிஜிட்டல் விமான நிலையமாகவும் இந்த விமான நிலையம் கருதப்படுகிறது. செக்-இன், பாதுகாப்பு சோதனை மற்றும் போர்டிங் செயல்முறைகள் ஏஐ மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. மொத்தம் 66 செக்-இன் கவுண்டர்கள் உள்ளன. காத்திருப்பு நேரத்தை குறைக்க 22 பொருட்கள் கொண்டு செல்வதற்கான பாயிண்ட்கள் உள்ளன.
விமான நிலையத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
மும்பையில் தற்போது 2வது சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இது ஆசியாவின் முதன்மையான இணைப்பு மையமாக மாறுவதற்கான பயணத்தில், ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இப்போது 160ஐ தாண்டி விட்டது. சிறிய நகரங்களில் விமான நிலையங்களை அமைப்பதன் மூலம் மக்கள் விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த முயற்சிகள் காரணமாக, பலர் முதல் முறையாக விமானப் பயணத்தை அனுபவித்துள்ளனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதுபோல், ரூ.12,200 கோடி செலவில் கட்டப்பட்ட ஆச்சார்யா ஆத்ரே சவுக் முதல் கப் பரேட் வரையிலான மும்பை மெட்ரோ-3ன் ஒரு பகுதியையும் துவக்கி வைத்தார்.