இயற்கை தரும் வரம்
தமிழகம், 70 சதவீத மழைப்பொழிவை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் மூலமே பெறுகிறது. இந்த காலமே தமிழகத்தின் முக்கியமான மழைக்காலம். இந்த மழைக் காலத்தில் கிடைக்கும் மழைநீரை சேமிப்பது, மழைநீரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது, மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பது போன்றவையே நாம் எதிர்கொள்ள வேண்டியவை. ஆண்டு முழுவதுக்குமான குடிநீர், விவசாய தேவைக்கான தண்ணீரை இந்த மழைக்காலத்தில் சேமித்துக் கொள்ளவேண்டும்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக வெள்ள பாதிப்புகளை சந்திக்கும் நகரமாக உள்ளது சென்னை. கடந்த 2015ம் ஆண்டு சென்னை மாநகரம் பெரும் வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டது. ‘வரும்முன் காப்போம்’ முயற்சிகளே எப்போதும் நல்லது. ஆனால், அதை அன்றைய அதிமுக அரசு செய்ய தவறியது. அதனால், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் அந்த மழைக்காலத்திலும், அதற்கடுத்த மழைகளின் போதும் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்தன. ‘‘10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், சென்னை குட்டிச்சுவராக்கப்பட்டு உள்ளது.
இதனால்தான் மழைநீர் தேங்குகிறது. அடுத்த பருவமழைக்குள் சென்னையில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என 2021ம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவரது உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது தலைநகரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பும் பெருமளவு குறைந்தது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, ‘‘மழைக்காலம் தொடங்கப் போகிறது.
ஏரி, குளம், குட்டை, கண்மாய்களையெல்லாம் தூர்வாரி, குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக செய்ய வேண்டும். அந்தப் பணிகளில் கலெக்டர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அத்தோடு நில்லாமல், பல்துறை அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு அமைச்சர்களை அனுப்பி வைத்து, பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள, பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் சமாளிக்க ஏற்பாடுகளை தயார்நிலையில் வைக்க ஆணையிட்டார்.
எல்லா இடங்களிலும் நிவாரண முகாம்கள் தயாராக இருப்பதாகவும், தமிழக அரசு அலர்ட்டாக உள்ளதாகவும், சமூக வலைதளங்கள், போன் மூலம் வரும் புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை என்பது உயிரினங்களுக்கு நன்மை செய்ய இயற்கை கொடுக்கும் வரம். மழைக்காலத்தில் நோய் பாதிப்பு, வெள்ள பாதிப்பு, இடி - மின்னல் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தமிழக அரசு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. அவற்றை முறையாக பின்பற்றினாலே மழை நமக்கு தீங்கின்றி பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது.
