ஒரு பக்கம் ஐ.டி பணி...மறுபக்கம் இயற்கை விவசாயம்... தற்சார்பு வாழ்வில் சாதித்துக் காட்டிய தஞ்சாவூர் விவசாயி!
இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து பார்த்தால் அது சொர்க்கம்ங்க. அதையும் நஞ்சில்லாத உணவை சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் ஆரோக்கியம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒன்று என நெஞ்சம் நிமிர்த்தி சொல்லி நஞ்சில்லாத இயற்கை விவசாயம் செய்து அசத்தி வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் அருகே நாலூரை சேர்ந்த இளைஞர் உதய்குமார்.நஞ்சில்லாத உணவு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஒரு முக்கிய அம்சமாகும். இயற்கை விவசாய முறை களைப் பின்பற்றி, நஞ்சில்லாத உணவுகளை உட்கொள்வதன் மூலம், உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தலாம். ஆரோக்கியம், மருத்துவம், கல்வி, நஞ்சில்லாத உணவு ஆகியவை பற்றிய தேடுதல்தான் இப்போது இயற்கை விவசாயத்தின் மீதான வேட்கையை அதிகரித்து தற்சார்பு வாழ்க்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்று தனது வயலில் அறுவடை பணிகளை பார்வையிட்டவாறு நம்மிடம் பேசத்தொடங்கினார் உதய்குமார்.
என்னோட அப்பா பேரு ரங்கநாதன். எங்களுக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் திருக்கருக்காவூரில் இருக்கு. நான் ஐ.டி. துறையில் வேலை பார்க்கிறேன். சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கியிருந்தபோது ஆரோக்கியமான உணவிற்காக பலவிதத்திலும் தேடுதல் நடத்தி இருக்கிறேன். கொரோனா லாக்டவுனிற்கு பின்னர் ஊருக்கு வந்து ஒர்க் ப்ரம் ஹோம் முறையில் வேலை பார்த்தேன். அதே நேரத்தில், கடந்த 5 வருடமாக எங்களின் வயலில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். ரொம்ப மனத்திருப்தியாக இருக்கு. இயற்கை விவசாயம் என்றால் ஒன்றை சார்ந்து ஒன்று என்பதுதான். வயலுக்குத் தேவையான எருவுக்கு உம்பளச்சேரி நாட்டு மாடுகள் 3 வளர்க்கிறேன். இவற்றின் சாணத்தை எனது இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறேன். அதுபோக, திருவிடைகோழிகள் 50க்கும் மேல் வளர்த்தேன். இப்போது 20 எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இவற்றின் எச்சம் எனது வயலுக்கு கிடைக்கும் இயற்கை உரம் ஆகும். நாட்டு வாத்துக்கள் 10 இருக்கின்றன. இவற்றின் முட்டை நாங்கள் வளர்க்கும் சிப்பி பாறை நாய்க்கும், பூனைக்கும் உணவு. மாடு மற்றும் கோழிகள், வாத்துக்களுக்கு எங்கள் வயலில் விளையும் நெல்லை அரிசியாக்கும் போது கிடைக்கும் குருணை உணவாக வைத்துக் கொள்கிறோம். இப்படி ஒன்றை சார்ந்து ஒன்று என்று ஒருங்கிணைந்த பண்ணையமாக செய்து வருகிறேன்.
எங்களோட 6 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்கள் தூயமல்லி, கருப்பு கவுனி, கிச்சடிசம்பா, சீரக சம்பா, பூங்கார், ரத்தசாலி, மைசூர் மல்லி ஆகியவைதான் சாகுபடி செய்து வருகிறேன். இரண்டு போகம் மட்டுமே சாகுபடி செய்கிறோம். ஏன்னா… வயலுக்கு ஓய்வு தரணும் என்ற எண்ணம்தான். அதனால் 3 போகம் சாகுபடி செய்வதில்லை. சாகுபடிக்கு முன்னாடி வயலை நன்கு உழுது தக்கை பூண்டை வளர்த்து மடக்கி எருவாக மாற்றி விடுவேன். பின்னர் மாட்டுச்சாணம் தெளித்து வயலை தயார் செய்து விடுவேன்.ரத்தசாலி நெல், ஒரு பாரம்பரிய அரிசி வகை. இது சிவப்பு நிற அரிசியைக் கொண்டது மற்றும் சாகுபடி செய்ய எளிதானது. இது 110-125 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். ரத்தசாலி நெல் சம்பா பருவத்திற்கு ஏற்றது. நிலத்தை நன்கு உழுது, இயற்கையான உரங்களை இட்டு, நீர் வடிந்து செல்லக்கூடிய வகையில் தயார் செய்ய வேண்டும். விதைகளை நேரடியாகவோ அல்லது நாற்றங்கால் அமைத்தோ நடவு செய்யலாம். போதுமான அளவு நீரை பாய்ச்சுவது அவசியம். இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது, நீர் நிர்வாகத்தை சரியாக கையாள வேண்டும். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.தூயமல்லி ஒரு பாரம்பரிய நெல் வகை. இதை சாகுபடி செய்ய, சரியான பருவத்தில் விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன் விதைகளை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர், நாற்றுகளை தயார் செய்து, வயலில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த பிறகு, சரியான அளவு தண்ணீர் மற்றும் உரங்களை அளிக்க வேண்டும். தூயமல்லி நெல் பொதுவாக 140-180 நாட்களில் அறுவடைக்குதயாராகிவிடும்.
பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், அமுத கரைசல் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்துகிறேன். இயற்கை முறையில் சாகுபடி என்பதால் களைகள் அதிகம் ஏற்படும். அதற்கு தண்ணீர் கட்டி நிறுத்தி 2 நாட்களுக்கு பின் வடித்து இரண்டு முறை களை பறிப்போம். இதனால் பயிர்கள் நன்கு ஊட்டத்துடன் வளரும். சம்பா அறுவடைக்கு பின்னர் பச்சைப்பயறு, உளுந்து, எள் என இருவித்திலை தானியங்களை சாகுபடி செய்வேன். இதனால் நஞ்சில்லாத உணவு கிடைக்கிறது. இதனால், மண்ணின் வளம் அதிகரிக்கிறது. என்னுடையது இயற்கை வேளாண்மை என்பதால் செலவுகள் மிகவும் குறைகிறது. சாகுபடி அதிகரிக்கிறது. நான் சாகுபடி செய்யும் நெல்லை அப்படியே விற்பதில்லை.அரிசியாக்கி உறவினர்கள், நண்பர்களுக்கு விற்பனை செய்கிறேன்.எங்கள் வீட்டு தேவைக்கும், நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் மூலம் தெரிந்தவர்கள் என்று வாய்மொழியாக கூறி இப்போது ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் சேர்ந்துவிட்டனர். எவ்வித விளம்பரமும் இல்லாமல் நெல் சாகுபடி மட்டுமின்றி எனது குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளையும் நானே விளைவித்துக் கொள்கிறேன். தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரை, பூசணி, பரங்கிக்காய், புடலங்காய், கீரை வகைகளை சாகுபடி செய்கிறேன். எங்கள் குடும்பத்திற்கு போதுமான அளவு வைத்துக் கொண்டு மற்றவற்றை உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன். எந்த காய்கறிகளும் வெளியில் வாங்குவதில்லை. காய்கறி சாகுபடியை மேட்டு பாத்தி அமைத்து மேற்கொள்கிறேன். உணவுத் தேவை அனைத்தும்எங்கள் வயலில் விளையும் பொருட்களில் இருந்தே கிடைத்து விடுகிறது. இதுமட்டுமல்ல மஞ்சள் கடம்பு, வெண் கடம்பு, நீர் மருது, வேங்கை, மகோகனி, தேக்கு, உதய மரம், வாதநாராயண மரம் போன்ற மரவகைகளை வளர்த்து வருகிறேன். இவற்றின் சருகுகள் எனது வயலுக்கு தேவையான இயற்கை உரமாகிறது. 15 வகையான பழ மரங்களும் வளர்த்து வருகிறேன். காலை, மாலை வேளையில் வயல் பணிகளும், மற்ற நேரத்தில் ஐ.டி., வேலையும் பார்க்கிறேன். எனது மனைவி இளமதி, என்னுடன் சேர்ந்து வயல் பணிகளை பார்த்துக் கொள்கிறார்.
எனது குழந்தைகளை தமிழ் வழி கல்வி முறையில்தான் சேர்த்துள்ளேன். அவர்களுக்கும் வயல் பணிகளை கற்றுத்தருகிறேன். வாழ்வியல் பாடம்தான் இன்றைய வாழ்க்கை பாடம். கணிதம், அறிவியல், வேதியியல், வரலாறு என்ற அனைத்தையும் இயற்கை விவசாயம் கற்றுத்தந்து விடுகிறது. இதுமட்டுமில்லாமல் எனது வயலை சுற்றி உயிர் வேலி அமைத்துள்ளேன். அதாவது நெய்வேலி காட்டாமணி, நொச்சி, ஆடாதொடை போன்றவைதான். இதனால் குருவிகள், பறவைகள் நிழல் தேடி அமரும். இவற்றுக்கு உணவிற்காக சோளம், கம்பு போன்றவற்றை விதைத்துள்ளேன். இது பறவைகளுக்கு மட்டுமே. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பதுதான் எனது நிலைப்பாடு. பறவைகள் அதிகம் வரும் போது தீமை செய்யும் பூச்சிகளை அவை உணவாக்கி கொள்ளும்.நான் முழுமையாக இயற்கை விவசாயம் மேற்கொள்வதால் வேளாண்மைத்துறையிலிருந்து என்னிடம் பயிற்சி அளிக்க சொல்கிறார்கள். நான் செய்வதை மற்றவர்களுக்கும் கற்றுத்தருகிறேன்.
தொடர்புக்கு:
உதய்குமார்: 99403 99388.