நேஷன்ஸ் கோப்பை கால்பந்து 3ம் இடத்துக்கு போட்டி மோதலுக்கு இந்தியா தகுதி
ஹிசோர்: நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் 3வது இடத்துக்கான போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. சிஏஎப்ஏ நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டிகள், தஜிகிஸ்தானின் ஹிசோர் நகரில் நடந்து வருகின்றன. இந்தியா, முதல் போட்டியில் தஜிகிஸ்தானை, 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆப்கானிஸ்தானுடான போட்டி கோலின்றி டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் பல முறை வாய்ப்புகள் கிடைத்தும் இந்திய அணி வீரர்கள் அவற்றை கோலாக்க தவறினர்.
அதேபோன்று, துவக்கத்தில் ஆக்ரோஷமாக ஆடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் கடைசி வரை கோல் போட முடியாமல் ஆட்டத்தை முடித்தனர். பி - பிரிவில் இந்தியாவும் தஜிகிஸ்தானும் தலா 4 புள்ளிகள் பெற்றன. கோல்கள் அடிப்படையில், இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இந்தியா, பி பிரிவில் 2ம் இடத்தை பிடித்தது. அதனால், வரும் 8ம் தேதி நடக்கும், 3 மற்றும் 4ம் இடத்தை தீர்மானிக்கும் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஏ பிரிவில் நடக்கும் அடுத்த போட்டியில் கிடைக்கும் வெற்றி, தோல்வியை பொறுத்து இந்திய அணியுடன் மோதும் அணி முடிவு செய்யப்படும்.