தேசிய நீர் விருது, நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு ஜனாதிபதி விருது பெற்ற கலெக்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து
சென்னை: ஒன்றிய அரசின் தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள் ஆகிய விருதுகளை பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி ஆகியோர் தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். முன்னதாக, திருநெல்வேலி கலெக்டர் ஆர்.சுகுமார், ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் விருதுகளை பெற்றதற்காக மதுரையில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஜல் ஜீவன் திட்டம் 15வது ஒன்றிய நிதிக்குழு மானியம், 6வது மாநில நிதிக்குழு மானியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பாரம்பரிய நீர்நிலைகளான ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள் புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், ஆறுகளின் கிளைகள் புத்தாக்கம், மழை நீர் சேகரிப்புகள் அமைத்தல், நீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்தல் போன்ற நீர் பாதுகாப்பு மற்றும் நீர் வள மேம்பாட்டு பணிகளை பாராட்டி 4 மாவட்ட அளவிலான விருதுகள் மற்றும் 1 கிராம ஊராட்சி அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.
2024-25ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக, 6வது தேசிய நீர் விருதுகள் பிரிவில் தேசிய அளவில் தெற்கு மண்டலத்தில் சிறந்த மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சிக்காக 3வது இடத்திற்கான விருதை பெற்றுள்ளது.
அத்துடன் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள் பிரிவின் கீழ் சிறந்த மாவட்டத்திற்கான விருதுகளை கோவை (3வது இடம்), நாமக்கல் (10வது இடம்), ராமநாதபுரம் (13வது இடம்) மாவட்டங்கள் பெற்றுள்ளன. டெல்லியில் உள்ள விக்யான் பவனில் கடந்த மாதம் 18ம்தேதி நடந்த விருது வழங்கும் விழாவில், விருது பெற்ற மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்று இந்திய ஜனாதிபதியிடம் இருந்து கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.