தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை 6 மாதங்களில் நிரப்ப வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் காலியாக உள்ள பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.பாலு கடந்த 2022ல் தாக்கல் செய்திருந்த மனுவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் காலாவதியாகி விட்டது. அந்த பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது. எனவே அரசியல் சாசன அந்தஸ்து உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் நிரப்புமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அதேபோல தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் கிளைகளை மாநில அளவில் அல்லது மண்டல அளவில் புதிதாக அமைக்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன் ஆஜராகி தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற தங்களது கோரிக்கை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
அப்போது ஒன்றிய அரசு தரப்பி்ல் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டு விட்டனர். துணைத் தலைவர் உள்ளிட்ட இதர காலியிடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப்பதவிகளும் விரைவில் நிரப்பப்படும் என்றார். இதைதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் 6 மாத காலத்துக்குள் நிரப்ப வேண்டும். ஒருவேளை அதற்குள் நிரப்பாவிட்டால் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.