அமெரிக்காவின் மிரட்டலுக்கு மத்தியில் ரஷ்யா பறந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: விரைவில் அமைச்சர் ஜெய்சங்கரும் பயணம்
புதுடெல்லி: ரஷ்யாவுடனான வர்த்தகத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் தற்சார்பு வெளியுறவுக் கொள்கையை நிலைநாட்டும் வகையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோ சென்றுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதையும், உக்ரைன் விவகாரத்தில் நடுநிலை வகிப்பதையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், இந்தியப் பொருட்கள் மீது மேலும் வர்த்தக வரிகள் விதிக்கப்படலாம் எனவும் அவர் எச்சரித்திருந்தார். இந்த விமர்சனங்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக நிராகரித்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என்றும், உலக எரிசக்தி சந்தைகளை நிலைப்படுத்தும் முன்பு ரஷ்யா உடனான வர்த்தகத்தை மேற்குநாடுகள் ஆதரித்ததாகவும், அவர்களும் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் இந்தியா சுட்டிக்காட்டியது. இந்தச் சூழலில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோவிற்குச் சென்றுள்ளார். இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்-400 ஏவுகணை அமைப்புகளைக் கூடுதலாக வாங்குவது, அவற்றிற்கான பராமரிப்பு உள்கட்டமைப்பை இந்தியாவில் அமைப்பது மற்றும் ரஷ்யாவின் சு-57 போர் விமானங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இந்தப் பயணத்தின் போது விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம், இந்தியாவின் தற்சார்பு வெளியுறவுக் கொள்கையைத் தொடர்வதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ரஷ்யா செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.