தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க இருந்த மதுரை மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது ஏன்? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
மதுரை: தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க இருந்தமதுரை மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. மதுரை, கோ.புதூர், சம்பக்குளம் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் வடிவேலன் (43). தனியார் வங்கி அதிகாரி. இவர் துப்பாக்கி சுடும் வீரராக உள்ளார். இவரது மனைவி கிருத்திகா. இவர்களுடைய மூத்த மகன் யுவநவநீதன் (15). இவர், மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். துப்பாக்கி சுடும் வீரரான இவரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.
தொடர்ந்து தீவிர பயிற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். சிறந்த ‘ஷூட்டராக’ திகழ்ந்த யுவநவநீதனுக்கு படிப்பில் போதிய ஆர்வம் இல்லை என தெரிகிறது. எனவே அவரது பெற்றோர் அடிக்கடி கண்டித்து வந்துள்ளனர். இதனால், மன வேதனையடைந்த யுவநவநீதன் அடிக்கடி பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கிருத்திகா தனது இளைய மகனை திருப்பாலையில் உள்ள தனியார் பள்ளியில் விட நேற்று முன்தினம் காலையில் சென்றார். அங்கிருந்து அலுவலகத்திற்கு சென்று விட்டார். மாலையில் வடிவேலனும், கிருத்திகாவும் கோயிலுக்கு சென்று விட்டனர்.
பெற்றோர் திட்டிய வேதனையில் வீட்டில் தனியாக இருந்த யுவநவநீதன், துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு பயன்படுத்தும் ஏர் ரைபிள் வகை துப்பாக்கியை பயன்படுத்தி, தனக்குத்தானே நெற்றிப்பொட்டில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு 8 மணியளவில் பெற்றோர் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் யுவநவநீதன் தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் அருகே போட்டிக்கு பயன்படுத்தும் துப்பாக்கி கிடந்தது.
இதுகுறித்து கே.புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், யுவநவநீதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் கூறுகையில், ‘‘படிப்பு சரியாக வராததால் மதுரையில் படித்து வந்த யுவநவநீதனை மேலூரில் உள்ள வேறு ஒரு பள்ளியில் சேர்த்தனர்.
அங்கு 10ம் வகுப்பு படித்து வந்தார். அக். 12ல் யுவநவநீதனுக்கு பிறந்த நாள். அன்றைய தினம் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினர். அவருக்கு பெற்றோர் பிறந்தநாள் பரிசாக புத்தாடைகளை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதன் பிறகு பள்ளிக்கு செல்லவில்லை. துப்பாக்கி சுடும் பயிற்சிக்கும் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்துள்ளார்.
மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வென்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த போட்டியில் பங்கேற்க டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்திற்கு செல்ல இருந்தார். விளையாட்டில் சாதிக்கும் உன்னால் ஏன் நன்றாக படிக்க முடியவில்லை என பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த யுவநவநீதன் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இறந்துள்ளார்’’ என தெரிவித்தனர்.
* உயிரை பறித்த ‘பாயின்ட் 22’
தற்கொலை செய்து கொண்ட யுவநவநீதன் பயன்படுத்திய துப்பாக்கி, விளையாட்டுப் போட்டிக்கு பயன்படுத்தும் ‘பாயின்ட் 22 ஸ்மால் ஃபோர் ஸ்போர்ட்ஸ் ரைபிள்’ வகையை சேர்ந்தது. இதற்கு பயன்படுத்தும் குண்டு ஒரிஜினல் அல்ல. ஆனால், சுட்டால் படுகாயம் ஏற்படுத்தி விடுமாம். அதுவும் நெற்றிப் பொட்டு, கண், தொண்டை உள்ளிட்ட உறுப்புகளை துல்லியமாக குறி வைத்து சுட்டால் மரணம் நிச்சயம். உடலில் மற்ற இடங்களில் குண்டு பாய்ந்தால் காயத்துடன் தப்பி விடலாம். இதை நன்கு அறிந்து வைத்திருந்த யுவநவநீதன், நெற்றிப்பொட்டில் அழுத்தி சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
* வாங்கியது எங்கே?
தற்கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை பயிற்சிக்காக யுவநவநீதன் வாங்கி வைத்திருந்தார். இந்த வகை துப்பாக்கி மேற்குவங்க மாநிலம் ஹூப்ளி மாவட்டம் சாராபாகன் அஞ்சலை சேர்ந்த பங்கஜ் பார்டரிடம் முறையாக வாங்கி வைத்திருந்துள்ளார். இதற்கு பங்கஜ் பார்டர் லைசென்ஸ் (எண்: 1304) வைத்துள்ளார். இவரிடம் இருந்து பயிற்சிக்காக யுவநவநீதன் வாங்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.