தேசிய இண்டர்ன்ஷிப் வேலைவாய்ப்பு பயிற்சி: சென்னை ஐஐடி அறிமுகம்
சென்னை: தேசிய இண்டர்ன்ஷிப் வேலைவாய்ப்பு பயிற்சி மதிப்பீட்டு முறை என்ற புதிய திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் தேசிய இண்டர்ன்ஷிப் வேலைவாய்ப்பு பயிற்சி மதிப்பீட்டு முறை என்ற புதிய திட்டத்தை ஐஐடி அறிமுகப்படுத்தியிருக்கிறது.
கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்கில் பொறியியல் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து மதிப்பீடு செய்யப்படும். இத்திட்டத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் 3ம் ஆண்டு, இறுதி ஆண்டு மாணவர்கள், பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஆகியோருக்கு 10 முதல் 12 வாரங்களுக்கு கணிதத்திறன், ரீசனிங், தகவல் தொடர்புத்திறன் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படும்.
அவர்களின் திறன்களுக்கு ஏற்ப ஐஐடியால் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை தொழில்நிறுவனங்களுடன் பகிர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேசிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சி குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, ‘‘பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவர்கள் தொழில்நிறுவனங்களில் இண்டர்ன்ஷிப் பயிற்சி பெறவும் தொடர்ந்து நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும் விரும்புகிறார்கள். அந்த வகையில் ஐஐடியின் புதிய முயற்சி சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. மேலும் ‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற எங்கள் நிறுவனத்தின் இலக்கை நிறைவேற்றுவதாகவும் அமையும்’ என்றார்.