தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து அசாம், குஜராத் மாநிலங்களுக்கு ரூ.707 கோடி வெள்ள நிவாரணம்: ஒன்றிய அரசு ஒப்புதல்
புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில், கடந்த 2024ம் ஆண்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அசாம், குஜராத்திற்கு ரூ.707.97 கோடி கூடுதல் ஒன்றிய நிதியாக வழங்க உயர்மட்ட கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் மீட்பு நிதியில் ஆண்டுக்கான தொடக்க இருப்பில் 50 சதவீதம் இருப்பதை உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டு, தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து இந்த உதவி வழங்கப்படுகிறது. இதில், அசாமுக்கு ரூ.313.69 கோடியும், குஜராத்துக்கு ரூ.394.28 கோடியும் வழங்கப்படும். மேலும், தீயணைப்பு சேவைகளின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்காக தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து அரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானுக்கு ரூ.903.67 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மொத்த ஒதுக்கீட்டில், ரூ.676.33 கோடி ஒன்றிய அரசின் உதவியாக இருக்கும்.
இதில், அரியானாவிற்கு ரூ.117.19 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.397.54 கோடி மற்றும் ராஜஸ்தானுக்கு ரூ.388.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 2025-26 நிதியாண்டில், மாநில பேரிடர் மீட்டு நிதியின் கீழ் 27 மாநிலங்களுக்கு ரூ.13,603.20 கோடியையும், தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் 12 மாநிலங்களுக்கு ரூ.2,024.04 கோடியையும் ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.