17 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி; தேசிய விருது பெற்ற பாடகர் விவாகரத்து: மகளுக்காக இணைந்திருப்போம் என பதிவு
மும்பை: தேசிய விருது பெற்ற பிரபல மராத்தி பாடகரும், நடிகருமான ராகுல் தேஷ்பாண்டே, தனது 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரபல மராத்தி திரையுலகில் முன்னணிப் பாடகரும், நடிகருமான ராகுல் தேஷ்பாண்டே, தனது மனைவி நேஹாவை 17 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தங்களது சட்டப்பூர்வமான பிரிவு, கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதமே சுமுகமாக முடிவடைந்துவிட்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவில், ‘17 ஆண்டுகால திருமண வாழ்க்கை மற்றும் எண்ணற்ற பசுமையான நினைவுகளுக்குப் பிறகு, நானும் நேஹாவும் பரஸ்பரம் பிரிந்து, தனித்தனியாக வாழ முடிவு செய்துள்ளோம். இந்த மாற்றத்தை மனதளவில் ஏற்றுக்கொள்வதற்கும், அனைத்தையும் சரியாகக் கையாள்வதற்கும் சிறிது காலம் எடுத்துக்கொண்டேன். எங்களது மகள் ரேணுகாவை இருவரும் இணைந்து வளர்ப்பதே எங்களின் தலையாய கடமை. மகளுக்கு நிலையான மற்றும் அன்பான ஆதரவை வழங்குவதற்காக, நானும் நேஹாவும் பெற்றோர்களாக இணைந்து செயல்படுவோம். தனிநபர்களாக நாங்கள் பிரிந்தாலும், பெற்றோர்களாக எங்கள் பிணைப்பும், ஒருவருக்கொருவர் நாங்கள் வைத்திருக்கும் மரியாதையும் எப்போதும் வலுவாக இருக்கும்.
இந்த நேரத்தில் எங்களின் தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பளித்து, அனைவரும் எங்களைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார். ‘மீ வசந்த்ராவ்’ என்ற மராத்தித் திரைப்படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்ற ராகுல் தேஷ்பாண்டே, மறைந்த புகழ்பெற்ற பாரம்பரிய இசைக்கலைஞர் வசந்த்ராவ் தேஷ்பாண்டேவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.