தேசியக் கல்வி தின நாயகர் அபுல்கலாம் ஆசாத்
கரும வீரர் காமராசரின் பிறந்த நாள் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதை அனைவரும் அறிவோம். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மெளலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை கடுமையாக எதிர்த்த ஆசாத் மறைந்து இன்றோடு 67 ஆண்டுகள் ஆகின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா நகரில், 1888 நவம்பர் 11ஆம் தேதி இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர் அபுல் கலாம் ஆசாத். இவர் பிறந்து சில ஆண்டுகள் கழித்து இவரது குடும்பம் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தது. சிறுவயதில் இருந்தே கல்வி பயில்வதில் ஆர்வம்கொண்டிருந்த அபுல் கலாம், தனது 12வது வயதிலேயே சிறுவர் பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கிவிட்டார். 1912ல் ‘அல் ஹிலால்’ எனும் பத்திரிகையைத் தொடங்கிய அவர் இந்திய விடுதலை குறித்துத் தொடர்ந்து எழுதினார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஆங்கில அரசு இவரது பத்திரிகைக்குத் தடை விதித்ததோடு தண்டத்தொகை கட்டவும் ஆணையிட்டது. 1916ல் வங்காளத்தை விட்டு வெளியேற்றப்பட்ட அபுல் கலாம், ராஞ்சியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
மகாத்மா காந்தியைச் சந்தித்து ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு 1920-ல் அபுல் கலாம் ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டதால் பல்வேறு போராட்டங்களில் பங்குகொண்டு பல நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். 1923-ல் காங்கிரஸ் தலைவராக அபுல் கலாம் ஆசாத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 35. இதன் மூலம் காங்கிரஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் தலைமைப் பொறுப்பை அலங்கரித்தவர் எனும் பெருமை இவருக்குக் கிடைத்தது. இந்து - முஸ்லிம் எனும் இரு பெரும் சமூக மக்களுக்கு விடுதலை உணர்வூட்டி சுதந்திரப் போராட்டத்திற்கு மக்களை அணி திரட்டினார். இந்து - முஸ்லிம்களை பிரித்து தனிநாடு ஒன்றை உருவாக்குவது எதிர்காலத்திற்கு உகந்ததல்ல எனக் கடுமையாக எச்சரித்தார்.
இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். இந்தியாவில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முறையை உருவாக்கப் பாடுபட்டார். மேலும் அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி கிடைக்கவும் நவீனக் கல்வி முறைக்கும் வித்திட்டவர் ஆசாத் தான். கிராமப்புற ஏழைகள் மற்றும் சிறுமிகளுக்குக் கல்வி கற்பிப்பதில் அவர் முக்கியத்துவம் அளித்தார். மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் தலைவராக, வயது வந்தோருக்கான கல்வியறிவு, உலகளாவிய தொடக்கக் கல்வி, 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசம் மற்றும் கட்டாயம், பெண் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி மற்றும் தொழில் பயிற்சியின் பல்வகைப்படுத்தல் ஆகியவற்றிற்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நிறுவுவதற்கும், பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) அமைவதற்கும் பாடுபட்டார்.
இந்தியாவின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அபுல் கலாம் ஆசாத் பிப்ரவரி 22, 1958ல் மறைந்தார். அவரைப் போற்றும் விதமாக 1992ல் மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிக் கெளரவித்தது. கல்வித்துறைக்கு இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளான நவம்பர் 11 தேசியக் கல்வி தினமாக 2008 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.