தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் மாநிலத்தின் வளர்ச்சி மீண்டும் வேகம் அடையும்: பீகாரில் பிரதமர் மோடி பேச்சு
பீகார்: பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் மாநிலத்தின் வளர்ச்சி மீண்டும் வேகம் அடையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி அங்கு பரப்புரையை தொடங்கினார். சமஸ்திபூரில் நடைபெற்ற பரப்புரையில் உரையாற்றிய அவர் பாரத ரத்னா விருது வென்ற கற்பூரி தாகூர் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார் என்றும் அனைவருக்கும் அவர் உத்வேகம் அளித்ததாகவும் குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்பின் நகலை கையில் வைத்திருப்பவர்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாக விமர்சித்த அவர் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் காட்சிகள் மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியின் போது பீகாருக்கு வழங்கப்பட்ட நிதியை விட தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி பீகாருக்கு 3 மடங்கு நிதியை வழங்கியதாகவும் தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட பட்டியலின சமூக மக்களுக்கு தங்கள் ஆட்சி முன்னுரிமை அளித்ததாகவும். நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கட்சிகளை வீழ்த்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.