தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல்; இந்திய சிறைகளில் நிரம்பும் வெளிநாட்டு கைதிகள்: நாட்டிலேயே மேற்குவங்கம் முதலிடம்
கொல்கத்தா: சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினரால் மேற்கு வங்க சிறைகள் நிரம்பி வழிவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள ‘இந்திய சிறைகளின் புள்ளிவிவரங்கள் 2023’ அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 6,956 வெளிநாட்டு சிறைக்கைதிகளில், 2,508 பேர், அதாவது 36 சதவீதம் பேர் மேற்கு வங்காளத்தின் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 4,906 கி.மீ. நீளமுள்ள எல்லையின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், மாநிலத்தின் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. 2023ம் ஆண்டில், 21,476 பேர் மட்டுமே கொள்ளளவு கொண்ட 60 சிறைகளில், 25,774 கைதிகள் (உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர்) அடைக்கப்பட்டிருந்தனர். மேற்குவங்க சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகளில் 89 சதவீதம் பேர் வங்கதேசத்தினர் ஆவர்.
இவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்கள். இங்குள்ள வங்கதேசத்தினரில், 778 பேர் தண்டனைக் கைதிகளாகவும், 1,440 பேர் விசாரணைக் கைதிகளாகவும் உள்ளனர். வங்கதேசத்திற்கு அடுத்தபடியாக மியான்மர் நாட்டினர் அதிகளவில் உள்ளனர். மொத்தமுள்ள 796 வெளிநாட்டு தண்டனைக் கைதிகளில் 204 பேர் பெண்கள் மற்றும் 12 பேர் திருநங்கைகள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.