பெயர், படம், குரலை பயன்படுத்த தடை கோரி நடிகையான எம்பி ஜெயா பச்சன் ஐகோர்ட்டில் மனு: அமேசான், பேஸ்புக் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி: தனது பெயர், புகைப்படம் மற்றும் குரலை வர்த்தக நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி நடிகையும், எம்.பி.யுமான ஜெயா பச்சன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சமீப காலமாக, பாலிவுட் பிரபலங்கள் தங்களின் பெயர், புகைப்படம், குரல் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களை, தங்களின் அனுமதியின்றி வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.
அந்த வகையில், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தங்கள் ஆளுமை மற்றும் விளம்பர உரிமைகளைப் பாதுகாக்க இடைக்காலத் தடைகளைப் பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது நடிகையும், சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயா பச்சனும் தன் உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜெயா பச்சன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சிலர் எனது புகைப்படங்களை மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளனர். பலர் எனது படங்களைப் பயன்படுத்தி டி-ஷர்ட்கள், போஸ்டர்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்களில் எனது அனுமதியின்றி எனது பெயர், குரல், படம் ஆகியவற்றை வர்த்தக ஆதாயத்திற்காகப் பயன்படுத்துகின்றனர்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மனு, நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அமேசான், ஃபேஸ்புக், ஈபே போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், திரைப்பட போஸ்டர்களில் உள்ள புகைப்படங்களின் பதிப்புரிமை, தயாரிப்பாளர்களுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்பதால், அதுகுறித்த வாதங்களை மனுவில் திருத்தம் செய்யுமாறு ஜெயா பச்சன் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.