நாமக்கல் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க காலை, மாலை சிறப்பு பயிற்சி
நாமக்கல் : நாமக்கல் அரசு பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மாணவர்களுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளது.நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். 30 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
இது சுமார் 125 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளியாகும். கடந்த காலங்களை ஒப்பிடும்போது, 10 ஆண்டுக்கு மேலாக இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வில் 90 சதவீதமும், பிளஸ்2 அரசு பொதுத்தேர்வில் 80 சதவீதமும் தேர்ச்சி பெற்றது.
இப்பள்ளியில், தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டுகளை விட குறைந்து வருவதால், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளை அழைத்து அறிவுறுத்தினார்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் சீனிவாசராகவன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் இந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்தே மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இதன்படி, பள்ளியில் தினமும் காலை மற்றும் மாலை நேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கி உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தினமும் காலை 8.30 மணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தினமும் காலை 8.30 மணிக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஒரு மணி நேரம் ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது. இது போல பள்ளி முடிந்த பின் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மேலும் 3 நாட்கள் தொடர்ந்து ஒரு மாணவர் வராவிட்டால் ஆசிரியர்கள் பள்ளி வேலைநேரம் முடிந்த பின்னர், மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து பள்ளிக்கு அனுப்பிவைக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: சிஇஓ மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவுறுத்தல் படி, சிறப்பு பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 1 மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் வகுப்பறையில் நடத்தப்படுகிறது.
மாணவர்களும் ஆர்வமாக வருகிறார்கள். தினமும் ஒரு பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலையில் நேரமாக வந்து பாடங்களை நடத்துகிறார்கள். காலையில் நடத்தப்படும் பாடங்களுக்கு மறுநாள் தேர்வு வைத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறோம்.
மாணவர்கள் குறைந்தபட்சம் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெறவேண்டும் என்ற நிலையை தாண்டி அதிக மதிப்பெண்பெற்று தேர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கில் இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் நாமக்கல் தெற்கு பள்ளியில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பள்ளிக்கு தொடர்ந்து 3 நாட்கள் வராத மாணவர்களும் கண்டறியப்பட்டு அவர்களின் வீடு தேடி சென்று அழைத்து வர ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பல நாட்களாக பள்ளிக்கு வராத 2 மாணவர்கள் தற்போது வரத்தொடங்கியுள்ளனர். கல்வியாண்டின் இறுதியில் இடைநிற்றல் மாணவர்களை அழைத்து வருவதால், அவர்களை தேர்வில் தேர்ச்சி பெற வைக்க முடியவில்லை.
இதனால் கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்தே இடை நிற்றல் மாணவர்களை பள்ளிக்கு மீண்டும் அழைத்து வருவதும், ஆசிரியர்களின் ஒரு பணியாக கருதி அதை செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.