நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் தேக்கத்தால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
புழல்: செங்குன்றம் அருகே நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் அதிகளவு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகன ஓட்டிகளும் மழைநீரில் ஊர்ந்தபடி கடந்து செல்வதில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் முக்கிய சாலையில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையும் ஒன்றாகும்.
இச்சாலை சென்னை, செங்குன்றம், தச்சூர், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகள் வழியாக ஆந்திராவுக்கு செல்கிறது. இச்சாலையை புனரமைக்கும் பணிகளுக்காக, செங்குன்றம் அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் ஒரு தனியார் நிறுவனம் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக புழல், செங்குன்றம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால் சுங்கச்சாவடி வழியே ஆந்திரா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மழைநீரில் ஊர்ந்தபடி தத்தளித்தபடி வாகனங்களை ஓட்டி செல்வதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனினும், இதுபற்றி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றி, சாலையை சீரமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.