நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்களிடம் தெரிவிக்க தனி மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை: நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்களிடம் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க தனி மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நல்லகண்ணு நேற்று முன்தினம் (22 ஆகஸ்ட் 2025), வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாளில் அவர் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும், நூறு வயது தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நலனின் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் உள்ளார்.
இந்த நிலையில், நல்லகண்ணு உடல் நிலை குறித்து அமைச்சர் கூறுகையில், "கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கடந்த 48 மணி நேரத்தில் உடல் நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு, அவரின் உறவினரை அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தார். மீண்டும் அவர் உணவுக் குழாயில் அடைப்பு காரணமாக மூச்சு பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார்.அவரது உடல்நிலை குறித்து மக்களிடம் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க தனி மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.