‘நயினார் நாகேந்திரன் சமரசம் பேசுகிறாரா?’ சைலண்ட் மோடில் ஓ.பன்னீர்செல்வம்
தேனி: பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் ஓபிஎஸ் மவுனமாக சென்றார். தேனி மாவட்டம், பெரியகுளம் இல்லத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை கேரள மாநிலம், ஆலப்புழா, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைக்கு காரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவரிடம் செய்தியாளர்கள், ‘செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கு அமித்ஷாவை சந்திப்பாரா?’ என கேள்வி எழுப்பினர். இதற்கு பன்னீர்செல்வம், `‘தெரியலையே... என்னிடம் தகவல் சொல்லவில்லையே’’ என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘கட்சியை உடைக்க பல பேர் சதி செய்கிறார்கள். அதை தவிடு பொடியாக்குவோம்’’ என பேசி இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, `‘நான் கோயிலுக்கு செல்கிறேன். திரும்பி வந்து பதில் கூறுகிறேன்’’ என கூறிவிட்டு ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார். மேலும், பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமரசம் பேச இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கும் அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் காரில் புறப்பட்டு சென்றார். செங்கோட்டையன் டெல்லி வழியாக ஹரித்வார் செல்வதாக கூறப்படும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கேரள பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.