ஒருவரை ஒருவர் சந்திப்பது நல்லது தான் விரைவில் நல்ல முடிவு வரும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
சென்னை: ஒருவரை ஒருவர் சந்திப்பது நல்லது தான். விரைவில் நல்ல முடிவு வரும். நாங்கள் எல்லோரையும் வரவேற்கிறோம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: இந்திய நாட்டிற்கு போராடிய தியாகிகளையும், சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களையும் கவுரவிப்பதையும் அவர்களுக்காக எல்லா உதவிகளை செய்வதிலும் பிரதமர் நரேந்திர மோடி எல்லோருக்கும் உதாரணமாக திகழ்ந்து கொண்டுள்ளார். உலகத்திலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக இந்தியாவை மோடி மாற்றி வருகிறார். வரி குறைப்பு மூலம் மக்களுக்கு மகிழ்ச்சியான சூழலை பிரதமர் மோடி உருவாக்கி இருக்கிறார். நவராத்திரி விழா மட்டுமல்லாமல், வரக்கூடிய தீபாவளிக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் வரி விலக்கு உள்ளது. டிடிவி.தினகரனை, அண்ணாமலை சந்தித்தது நல்லது தான். ஒருவரை ஒருவர் சந்திப்பது நல்லது தான், விரைவில் நல்ல முடிவு வரும். நாங்கள் எல்லோரையும் வரவேற்கிறோம். தேவைப்பட்டால் நானும் சந்திப்பேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* விஜய் பிரசாரம் சினிமா மாதிரி இருக்கு..
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனிடம் நிருபர்கள், “அதிமுக-பாஜ பொருந்தா கூட்டணி என்று தவெக தலைவர் நடிகர் விஜய் கூறிருக்கிறாரே” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தவெக தலைவர் விஜய் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. விஜய் பிரசாரம் அரசியல் போன்று இல்லை. அவர் சினிமாவில் நடிப்பது போல உள்ளது” என்று தெரிவித்தார். தொடர்ந்து கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “பிறகு சொல்கிறேன்” என்று மட்டும் கூறினார்.