நாளுக்கு நாள் அதிகரிக்கும் நெரிசல்; நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில் தினசரி ரயிலாக மாறுமா?.. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தும் தாமதம்
நாகர்கோவில்: நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில் தினசரி ரயிலாக மாறுமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகள் இடையே அதிகரித்துள்ளது. இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா இடமாக விளங்கி வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள், அதிகளவில் அருகில் உள்ள கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கும் செல்கிறார்கள். இதே போல் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது வழக்கம். இது தவிர குமரி உள்பட தென் மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கான சென்னை செல்கிறார்கள். இவர்களின் வசதிக்காக, தென் மாவட்டங்களில் இருந்து கூடுதல் ரயில்கள் தேவை என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தற்பாது இயங்கும் வந்தே பாரத், கன்னியாகுமரி - எழும்பூர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரயில்களுமே நாள்தோறும் நிரம்பி வழியும் நிலையில் தான் செல்கிறது. அதிக கட்டணத்துடன் இயங்கும் வந்தே பாரத் ரயில் கூட பெரும்பாலான நாட்களில் ஹவுஸ்புல் நிலையுடன் தான் பயணிக்கிறது. இது மட்டுமின்றி வாராந்திர ரயில்கள், சிறப்பு ரயில்களும் நிரம்புகின்றன. எனவே தென் மாவட்ட மக்களின் நலன் கருதி கன்னியாகுமரி அல்லது நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில்கள் வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகி உள்ளது.
புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படா விட்டாலும் கூட வாராந்திர ரயில்களை தினசரி ரயிலாக மாற்ற, பயணிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் தாம்பரம் - நாகர்கோவில் (வண்டி எண் 22657 / 22658) அதிவிரைவு ரயில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, திங்கள், புதன்கிழமைகளிலும், நாகர்கோவிலில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலும் இந்த ரயில் இயங்குகிறது. நாகர்கோவிலில் இருந்து (வண்டி எண் 22658) மாலை 5.05க்கு புறப்பட்டு, தாம்பரத்துக்கு அதிகாலை 4.10க்கு செல்லும். தாம்பரத்தில் இருந்து (வண்டி எண் 22657) இரவு 7.30க்கு புறப்பட்டு, காலை 7 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு வந்தடையும். இதே போல் தாம்பரம் - ஐதராபாத் (வண்டி எண் 12759 / 12760) கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை மேற்கொண்டால் அனைத்து பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருப்பதோடு, ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும் என பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டும், ரயில்வே நிர்வாகம் மவுனமாக உள்ளது. இது தொடர்பாக பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், மங்களூரு - திருவனந்தபுரம், திருவனந்தபுரம் - மங்களூரு இரவு நேர விரைவு ரயிலினை கன்னியாகுமரி வரை நீட்டிக்கும் திட்டத்தினை திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுவும் நிலுவையில் உள்ளது. இதைப்போன்று தாம்பரம் - ஐதராபாத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்கும் முன் மொழிவுகள் தென்னக ரயில்வே பொது மேலாளர் மற்றும் தென் மத்திய ரயில்வே பொது மேலாளர் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டு தற்போது ரயில்வே வாரிய தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதி விரைவு ரயிலான தாம்பரம் - நாகர்கோவில் , நாகர்கோவில் - தாம்பரம் ரயிலை வாரத்திற்கு 3 நாட்களுக்கு பதிலாக தினசரி ரயிலாக மாற்றுவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருந்த போதும், திருவனந்தபுரம் கோட்டத்தின் மறுப்பு காரணமாக தினசரி ரயிலாக மாற்றப்படவில்லை என்றனர்.