நாகர்கோவில் புத்தேரியில் டாரஸ் லாரி மோதி நொறுங்கிய மின்கம்பம்: பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு - விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்றதால் பரபரப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் புத்தேரி ஆஸ்பத்திரி எதிரில், டாரஸ் லாரி மோதியதில் மின் கம்பம் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லாமல் தப்பியது. விபத்து நிகழ்ந்த பின்னரும் டாரஸ் லாரி நிற்காமல் பறந்தது. நாகர்கோவில் புத்தேரி பகுதியில் இருந்து வடசேரி நோக்கி இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் டாரஸ் லாரி வந்தது. புத்தேரி ரயில்வே மேம்பாலத்தை கடந்து சிபிஎச் மருத்துவமனை அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. டாரஸ் லாரி இடித்ததும், வெடிகுண்டு வெடித்தது போல் டமார் என சத்தம் கேட்டது.
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது மின் கம்பம் சுக்கு நூறாக உடைந்து சிதறியது தெரியவந்தது. அதன் பின்னரும், டாரஸ் லாரி டிரைவர் நிறுத்தாமல் வேகமாக வண்டியை எடுத்து விட்டு அங்கிருந்து தப்பினார். மின் கம்பம் உடைந்ததில், மின் ஒயர்களும் அறுந்து விழுந்தன. பகல் வேளையில் அந்த பகுதியில் பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள் நிற்பது வழக்கம். விபத்து நடந்த சமயத்தில் யாரும் இல்லாததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. புத்தேரி மேம்பாலத்தில் இருந்து வடசேரி நோக்கி வரும் சாலை இறங்கு தன்மை கொண்டது. பாலத்தை கடந்து வேகமாக வந்த டாரஸ் லாரி கட்டுப்பாட்டு இல்லாமல் மின் கம்பத்தை இடித்து தள்ளி விட்டு சென்றதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விபத்து குறித்து மின்வாரியத்துக்கும், வடசேரி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் மின் வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அறுந்து விழுந்த மின் ஒயர்களை மாற்றி அமைத்து மின் வினியோகம் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டது. இரவு மற்றும் அதிகாலை வேளையில் டாரஸ் லாரிகள் அசூர வேகத்தில் செல்கின்றன. இதனால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.