நாகர்கோவில் அருகே மின் தடையால் 400 காடை கோழி குஞ்சுகள் உயிரிழப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே மின் தடை காரணமாக 400 காடை கோழி குஞ்சுகள் பரிதாபமாக இறந்தன. நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் ஊராட்சியில், காடை குஞ்சு பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 60 சதவீத நிதி மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன், மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைத்து உள்ளனர். இதற்கான காடை குஞ்சுகள், கோவையில் இருந்த கொண்டு வரப்படும்.
சமீபத்தில் 4000 காடை கோழி குஞ்சுகள் கொண்டு வரப்பட்டன. காடை கோழிக்குஞ்சுகள் குறிப்பிட்ட பருவத்தை அடைவதற்காக அந்த வளாகத்தில் உள்ள 3 அறைகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு அவை வளர்க்கப்பட்டு வருகின்றன. மின் விளக்கு வெப்பம் இருந்தால் தான் காடை கோழிக்குஞ்சுகள் வளரும். இந்தநிலையில் சமீபத்தில் அடிக்கடி அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டு வந்தது.இதன் காரணமாக மின் குமிழிக்குள் இருந்த காடை கோழி குஞ்சுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. சுமார் 400 காடை கோழி குஞ்சுகள் இறந்து விட்டன. எஞ்சிய கோழிக்குஞ்சுகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேரேகால் புதூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் உள்ள சேவை மையத்தில் தான் காடை குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இவைகளால் துர்நாற்றம் வீசி அருகில் உள்ள குடியிருப்பில் மக்கள் இருக்க முடியவில்லை. வாந்தியும் குமட்டலும் ஏற்பட்டு உணவு அருந்த முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே இது குறித்து கலெக்டரிடம் புகார் செய்துள்ளோம். தற்போது மின் பிரச்சினை காரணமாக காடை குஞ்சுகள் இறந்துள்ளன. இவை பரிதாபமாக உள்ளது. போதிய வசதிகள் செய்து, வேறு இடத்துக்கு இதை மாற்ற வேண்டும் என்றனர்.