தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாகாலாந்து ஆளுநரும், பாஜ மூத்த தலைவருமான இல.கணேசன் சென்னையில் காலமானார்: முதல்வர் நேரில் அஞ்சலி

சென்னை: நாகாலாந்து ஆளுநரும், பாஜ மூத்த தலைவருமான இல.கணேசன் சென்னையில் நேற்று மாலை காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினார். நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்து வந்தவர் இல.கணேசன். இவர் சென்னை தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள தனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் தனது வீட்டுக்கு இல.கணேசன் வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி காலையில் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது.

இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியு பிரிவில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்ளிட்ட தலைவர்கள் அவர் விரை​வில் நலம்​பெற்​று, மீண்​டும் நல்ல உடல்​நிலைக்கு திரும்ப வேண்​டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர்.

ஒரு வாரத்திற்கும் மேலாக இல.கணேசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இல.கணேசன் நேற்று மாலை 6.23 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மறைந்த இல.கணேசனுக்கு வயது 80. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு பெசன்ட்நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட இல.கணேசன் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். தஞ்சாவூரில் 1945 பிப்ரவரி 16ம் நாள் லட்சுமி ராகவன்-அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார்.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பிரசாரகராக இருந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டதால் திருமணமே செய்து கொள்ளாமல் பொதுவாழ்ல் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் தனது வேலையை விட்டு விட்டு முழுநேர பணியாளராக இருந்து வந்தார். பின்னர், பாஜவின் தேசிய செயலாளர் மற்றும் கட்சியின் தேசிய துணை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1991ல் பாஜவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவை தேர்தலிலும் தென்சென்னை தொகுதியில் பாஜ வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மத்தியபிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு 2016ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். 2021 ஆகஸ்ட் 22ம் தேதி இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தால் 17வது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து 2023 பிப்ரவரி 20ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவால் 19வது நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஆர்.எஸ்.எஸ் தலைவரும், பாஜவின் தமிழக முன்னாள் தலைவருமான இல.கணேசன் 1990களின் முற்பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து பாஜவுக்கு மாறினார். அப்போது அவர் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றுவதற்காக அனுப்பப்பட்டார். 2003 வரை அந்த பதவியை வகித்தார்.

தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளைப் பேசும் பன்மொழிப் புலமை பெற்றவர். கட்சியை அதன் கடினமான காலங்களில் வெற்றி பெறச் செய்தார். அவரது பதவி காலத்தில் பாஜ ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது. அந்த அரசாங்கம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்ந்தது.

இலங்கை, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பா.ஜ. தொடர்புகளை வளர்க்க இல.கணேசன் உதவியதாகவும் நம்பப்படுகிறது. மேலும் கலைஞர், ஜெயலலிதா மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் நல்லுறவை பேணி வந்தார். இல.கணேசன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

* நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:  மூத்த அரசியல் தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். இல.கணேசன் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்த, நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர். அரசியல் வாழ்க்கைக்காகத் திருமணம் கூட செய்துகொள்ளாமல் பொதுவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.

மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்து கொண்டு, அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்தவர். இல.கணேசன், கலைஞர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, கணேசன் பிறந்தநாளில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தமது அன்பை வெளிப்படுத்தி இருந்தார். எளிமை, அதிர்ந்து பேசாத பண்பு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பிலும் நண்பர்களைக் கொண்டவராக விளங்கினார்.

என் மீதும் தனிப்பட்ட முறையிலும் அன்பு காட்டி வந்தார். அவரது இல்லத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவரும் அவரது குடும்பத்தினரும் என்னை நேரில் வந்து அழைக்கும் அளவுக்கு நல்ல நட்பினை நாங்கள் இருவரும் பேணி வந்தோம். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.