நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பாஜ மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென நேற்று அனுமதிக்கப்பட்டார். நாகாலாந்து மாநில ஆளுநராக இருக்கும் இல.கணேசன், சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் தனது வீட்டுக்கு இல.கணேசன் வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் அவர் வழுக்கி விழுந்ததாக தெரிகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டதால் உடனடியாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அங்கு அவருக்கு ஐசியு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று தெரிகிறது.
நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ள இல.கணேசனுக்கு வயது 80. இதற்கு முன்பு இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்குவங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார். பாஜவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இல.கணேசன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அண்மையில்தான் இல.கணேசன் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
* ‘விரைவில் நலம்பெற வேண்டும்’
நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மிகுந்த கவலை கொள்கிறேன். அவர் விரைவில் நலம்பெற்று, மீண்டும் நல்ல உடல்நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.