தே.பா. சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வாங்சுக்கின் மனைவி மனு ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரியும் நடந்த போராட்டங்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயமடைந்தனர். இப்போராட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து தீவிரமாக பங்கேற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த மாதம் 26ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் 12 மாதங்கள் வரை விசாரணை இன்றி தடுப்பு காவலில் வைக்க முடியும். இந்நிலையில், வாங்சுக் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும், அவரை உடனடியாக விடுவிக்கக் கோரியும் அவரது மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்சாரியா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாங்சுங்கின் மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘மனுதாரருக்கு அவரது கணவர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை கூட போலீசார் தெரிவிக்கவில்லை. எந்த காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரியாமல் அதை சவால் செய்ய முடியாது’’ என்றார். இதற்கு சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘கைது செய்யப்பட்டவருக்கு மட்டுமே காரணத்தை தெரிவித்தால் போதும். அவரது மனைவிக்கு தெரிவிக்க வேண்டுமென்ற சட்டப்பூர்வ தேவை எதுவும் இல்லை. ஆனாலும் கைதுக்கான காரணங்களை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்கிறோம்’’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக ஒன்றிய அரசும், லடாக் யூனியன் பிரதேச நிர்வாகமும் பதிலளிக்க நோட்டீஸ் விடுத்தனர். மேலும், தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை எனக் கூறி விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.