கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட வழக்கில் மர்மம் நீடிப்பு
நாமக்கல்: நாமக்கல்லில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு அன்புசெல்வன்(21), மனோ(19) ஆகிய இரண்டு மகன்கள். அன்புசெல்வன் மோகனூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மனோ நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை மாணவர் மனோ, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது சடலம் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகாலட்சுமியும் அவரது கணவர் பிரேம்குமாரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனோ ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது அவரது தாய்க்கு தெரியவில்லை. விசாரணையில் மனோவுக்கு யாருடனும் பிரச்னை இல்லை என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் மனோவுடன் படித்து வரும் கல்லூரி மாணவர்கள், மனோவின் உறவினர்கள், மனோவின் தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து மர்மம் நீடித்து வருகிறது. இந்த வழக்கில் துப்பு துலக்க ஏஎஸ்பி ஆகாஸ்ஜோஸி, இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.