திருநங்கையுடன் தங்கிய வாலிபர் மர்ம மரணம்; போலீசில் பெற்றோர் புகார்
அண்ணாநகர்: கோயம்பேடு, நியூ காலனியில் கடந்த சில மாதங்களாக திருநங்கையுடன் ஒரு வாலிபர் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அந்த வாலிபர் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மனோஜ் (19) என்பதும், இவர் ஐயப்பன்தாங்கல் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டும் வேலை பார்த்து வந்ததும், கோயம்பேட்டில் வசிக்கும் திருநங்கையுடன் இரவு நேரங்களில் தங்கி வந்ததும் தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு திருநங்கையுடன் தங்கியபோது, அவர் தற்கொலை செய்தாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த மனோஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மனோஜின் சாவில் மர்மம் இருப்பதாக கோயம்பேடு போலீசில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மனோஜின் சடலத்தை நேற்று காலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, மனோஜ் இறப்புக்கான காரணம் தெரிய வரும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.