நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம் சொத்து வாங்கியதில் பிரச்னையா? பத்திரப்பதிவு ஆபீசில் விசாரணை
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் ெதாடர்பாக, அவர் சொத்து வாங்கியது, விற்றதில் பிரச்னை ஏதும் உள்ளதா? என்பது குறித்து திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட 32 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பாக கடைசி 3 நாட்கள் அவருடன் அதிக நேரம் இருந்தவர்கள், அவரது செல்போனில் அதிக நேரம் பேசியவர்களிடமும் விசாரணை நடத்தி அதனை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.
மேலும் மூன்று ஆண்டுகளாக அவரது வங்கி கணக்குகளிலுள்ள வரவு, செலவு கணக்குகள் தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்களிடமும் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜெயக்குமார் மரணத்திற்கு முன்பாக வாங்கிய சொத்துக்களும், விற்பனை செய்த சொத்துக்களும் தொடர்பாக ஏதேனும் பிரச்னை உள்ளதா? என்பது குறித்து திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். இந்த விசாரணை இன்றும் (4ம் தேதி) நடக்கவுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே அவர் மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன் சிறிய அளவிலான சொத்துக்கள் மகள் மற்றும் 2 மகன்கள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூகுள் பே மூலம் மகள் கேத்ரினுக்கு ரூ.10 ஆயிரமும், 2வது மகன் ஜோ மார்டினுக்கு ரூ.15 ஆயிரமும் அனுப்பி வைத்த விவரமும் தெரிய வந்துள்ளது.