மர்ம டிரோன் பறந்ததால் ஜெர்மனியில் ஏர்போர்ட் மூடல்
முனிச்: ஜெர்மனி விமான நிலையத்தில் மர்மமான டிரோன் பறந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் முனிச் விமான நிலையப்பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ச்சியாக டிரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக விமானங்களை இயக்குவதற்கு விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்தனர். முதலில் இரவு 10 மணி வரை விமானங்கள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.
விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5மணி முதல் விமானங்கள் இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்காலிகமாக விமான நிலையம் மூடப்பட்டதால் சுமார் 17 விமானங்கள் இயக்கமுடியாமல் போனது. இதன் காரணமாக சுமார் 3000 பயணிகள் அவதிக்குள்ளாகினார்கள். மேலும் 15 விமானங்கள் ஜெர்மனியில் உள்ள மற்ற மூன்று விமான நிலையங்களுக்கும், ஆஸ்திரியாவின் வியன்னாவிற்கு திருப்பி விடப்பட்டன.