என் பள்ளி! என் பெருமை! போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கினார்கள் அமைச்சர்கள்
சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும், கல்வி வளர்ச்சி நாளான ஜூலை-15ஆம் நாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் “என் பள்ளி! என் பெருமை!!” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் ஜூலை-15ஆம் நாளையொட்டி கல்வி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு செய்து வரும் பெரும் பங்களிப்பையும் நலத்திட்டங்களையும் மாணவர்கள் அறியும் விதமாகவும், மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையிலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் “என் பள்ளி! என் பெருமை!!” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
கல்வி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், தனிநபர்களின் மேம்பாட்டிற்கும் இன்றியமையாதது. எனவே, கல்வியைப் பெறுவதும், அதைப் பரப்புவதும் மிகவும் முக்கியப் பணியாகும். தமிழ்நாடு அரசு, மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் நோக்கில், புதுமையான முயற்சிகளைச் செய்து வருகிறது. புதிய பள்ளிக்கூடங்களை நிறுவுதல், ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்குதல், நவீன முறைகளில் பாடங்களைக் கற்பித்தல் போன்ற பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது.
மேலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், விலையில்லா சீருடை, காலணிகள் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் இவை தவிர, கல்வி உதவித்தொகைகள் மற்றும் திட்டங்கள் மூலம் மாணவர்கள் தொடர்ந்து இடைநிற்றல் இன்றி கல்வி பயில வழி வகுத்துள்ளது. இன்று பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளதற்கு இது போன்ற சீர்மிகு திட்டங்களே காரணம் என்றால் மிகையில்லை. தமிழ்நாடு அரசு கல்வி வளர்ச்சிக்குச் செம்மையானத் திட்டங்களை தீட்டி திறம்பட செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கல்வி கற்காதவர்களே இல்லை என்ற உயர்ந்த நிலை உருவாகியுள்ளது.
கல்வி வளர்ச்சி நாளைக் கொண்டாடும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் தற்போது கல்வி பயிலும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபெறும் வகையில் “என் பள்ளி! என் பெருமை!!” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களான எக்ஸ் தளம்(X), படவரி(Instagram), முகநூல்(Facebook), புலனம் (WhatsApp), வலையொளி (YouTube) வாயிலாகப் 10 வகையிலானப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் மொத்தம் 9252 நபர்கள் கலந்துகொண்டனர், இதில் “என் பள்ளி என் பார்வையில்” என்ற போட்டியில் 7 நபர்களும், “நான் என் பள்ளியின் பேச்சாளன்” என்ற போட்டியில் 7 நபர்களும், “என் பள்ளி என் கலை” என்ற போட்டியில் 7 நபர்களும், “என் அன்பான ஆசிரியை, ஆசான்” என்ற போட்டியில் (மாணவர்கள்) 7 நபர்களும், “என் கதை என் எழுத்தில்” என்ற போட்டியில் 7 நபர்களும், “என் பள்ளி என் நினைவு” என்ற போட்டியில் 7 நபர்களும், “பள்ளிக்கூடம் வந்தேனே” என்ற போட்டியில் 7 நபர்களும், “என் அன்பான ஆசிரியை, ஆசான்” என்ற போட்டியில் (முன்னாள் மாணவர்கள்) 7 நபர்களும், கல்விக்கான தமிழ்நாடு அரசின் திட்டங்கள்” என்ற போட்டியில் 7 நபர்களும், “என் முன்னெடுப்புகள்” என்ற ரீல்ஸ் போட்டியில் 7 நபர்களும் என 70 நபர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும், இன்று (16-10-2025) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “என் பள்ளி! என் பெருமை!!” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தி சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராம், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலாளர் இரா. சுதன், பள்ளிக் கல்வித் துறை முனைவர். ச. கண்ணப்பன் கூடுதல் இயக்குநர் இரா. பாஸ்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் ஊடக மைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.