மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் நவராத்திரி பெருவிழா: குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு..!
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று (22.09.2025) முதல் 01.10.2025 வரை நடைபெறவுள்ள நவராத்திரி பெருவிழாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, விநாயகர் அகவல் மற்றும் அபிராமி அந்தாதியுடன் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையானது திருக்கோயில்களின் வளர்ச்சிக்கும், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையிலும் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,706 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதோடு, ஆக்கிரமிப்பில் இருந்த 1,033 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,955 கோடி மதிப்பிலான 7,928 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. திருக்கோயில்கள் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 2,800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர், சிவவாக்கிய சித்தர், பதஞ்சலி சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், வள்ளலார், சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர், நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினைத் தொகுத்தவரான ஸ்ரீமத்நாதமுனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தார் ஆச்சாரியார், 63 நாயன்மார்களில் நந்தனார், காரைக்கால் அம்மையார் போன்ற அருளாளர்களுக்கும் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு மயிலாப்பூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், பேரூர், திருநெல்வேலி, திருவானைக்காவல், மதுரை, திருவாரூர், திருவாலங்காடு ஆகிய 9 சிவாலயங்களில் மகாசிவராத்திரி பெருவிழாவும், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை, மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு கூடுதலாக இராமேசுவரம், விருத்தாச்சலம், திருநாகேஸ்வரம் ஆகிய 3 சிவாலயங்களில் மகாசிவராத்திரி பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. 25 திருக்கோயில்களில் மாதந்தோறும் பௌர்ணமி நாளன்று திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 73,440 பெண் பக்தர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இன்றைய தினம் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் தொடர்ந்து நான்காம் ஆண்டாக அம்பிகைகளின் திருவுருவங்களை ஒரே இடத்தில் எழுந்தருளச் செய்து, மாபெரும் கொலுவுடன் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி பெருவிழாவினை தொடங்கி வைத்தோம். இன்று முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் பூஜையும், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் சி.ஹரிப்ரியா, பொ. ஜெயராமன்,கோ.செ.மங்கையர்க்கரசி, சி.கல்யாணி, இணை ஆணையர்கள் இரா. வான்மதி, கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை, பெ.க.கவெனிதா, துணை ஆணையர் இரா.ஹரிஹரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.