மியான்மரில் ராணுவக் காவலில் உள்ள ஆங் சான் சூகி கவலைக்கிடம்: மகன் தகவலால் பரபரப்பு
லண்டன்: மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளரான ஆங் சான் சூகி, கடந்த 2021 முதல் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டுள்ளார். ஊழல் மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதற்காக, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், தனது தாய் ஆங் சான் சூகி இதய பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரது மகன் கிம் அரிஸ் தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள கிம் அரிஸ் தொலைபேசியில் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “எனது அம்மாவுக்கு 80 வயதாகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு, ஒரு இருதய நோய் நிபுணரைப் பார்க்க அவர் கோரி உள்ளார்.
அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை. அவர் உயிரோடுதான் இருக்கிறாரா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆங் சான் சூகி உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் மியான்மர் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். கிம் அரஸின் இந்த குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்துள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜாவ் மின் துன்,’ஆங் சான் சூகியின் உடல்நிலை நன்றாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளனர்.