மியான்மரில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை: மியான்மர் கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வங்கதேச கடலோரப் பகுதிக்கு நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
மோன்தா புயல் வடக்கு நோக்கி நகர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் நிலவிவருகிறது. இதற்கிடையே வெப்பசலனம் காரணமாக நாகப்பட்டினம் பகுதியில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. பிற மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலை காணப்பட்டது. இந்நிலையில் அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலையில் வடக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுக்குறைந்து காணப்பட்டது.
மேலும், அது வடக்கும் மற்றும் வட கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழந்தது. இது தவிர வங்கக் கடலில் மியான்மர் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவானது. இது மேலும் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் வங்கதேச கடலோரப் பகுதியை ஒட்டி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 7ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். இயல்பை ஒட்டி வெப்பநிலை காணப்படும். ஒரு சில இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும். மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.