மியான்மரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 19 பேர் பலி!!
நைபியிடவ்: மியன்மாரின் கிராமப் பள்ளி ஒன்றின் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர். மாண்டோரில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று ஆயுதக் குழு ஒன்றும் உள்ளூர் ஊடகங்களும் தெரிவித்துள்ளன. ரக்கைன் மாநிலத்தின் மேற்கில் உள்ள கியாக்டாவ் நகரில் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அராக்கான் இனத்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அந்தக் கிராமப் பகுதி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 17, 18 வயது மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த கிராமத்தில் இணைய, திறன்பேசிச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமை சுயேச்சையாக உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயிலிருந்து தென்மேற்கே 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியாக்டாவ், கடந்த ஆண்டு பிப்ரவரியில் அராக்கான் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.
முன்னதாக ஆங் சான் சூச்சியின் தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியதை அடுத்து மியன்மார் குழப்பத்தில் உள்ளது. இது பரவலான மக்கள் எதிர்ப்பைத் தூண்டியது. அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ராணுவ பலம் கொண்டு அடக்கப்பட்ட பிறகு, ராணுவ ஆட்சியின் பல எதிர்ப்பாளர்கள் ஆயுதம் ஏந்தினர். அத்துடன் நாட்டின் பெரிய பகுதிகள் இப்போது மோதலில் சிக்கியுள்ளன. ஆட்சி மாற்றம் தொடங்கியதிலிருந்து, பாதுகாப்புப் படைகளால் 7,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அரசு சாரா அமைப்புகளால் தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மதிப்பிடுகின்றன.