மை ஃபிட்னஸ் பல்!
ஆரோக்கிய வாழ்க்கையை விரும்பாத மக்கள் யார் தான் உள்ளனர். எனினும் நம்மை வழிநடத்த ஒருவர் இருந்தால் இன்னும் சுலபமாக எடை குறைப்பு, ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்றலாம். அதற்குதான் வழிகாட்டியாக விளங்குகிறது மை ஃபிட்னஸ் பல் செயலி (MyFitnessPal) . உணவு மற்றும் உடல் எடை மேலாண்மை செயலிகளில் மிக முக்கியமான ஒன்று. இதன் முக்கிய நோக்கம், ஒருவர் தினசரி எவ்வளவு கலோரி எடுத்துக்கொள்கிறார்கள், எவ்வளவு எரிக்கிறார்கள் என்பதைக் கண்காணித்து, அவர்களின் உடல் நல இலக்குகளை அடைய உதவுவதுதான். எடை குறைக்க நினைப்பவர்களுக்கும், ஆரோக்கியமான உணவு பழக்கத்தைக் கடைபிடிக்க விரும்புவோருக்கும் இது ஒரு சிறந்த செயலி. இந்த செயலியில் உலகளாவிய அளவில் பெரும்பாலான உணவுகளின் ஊட்டச்சத்து தகவல்கள் சேகரிக்கப்பட்டிருப்பதால், எதைச் சாப்பிட்டாலும் அதன் கலோரி அளவு, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்ற சத்துக்களின் விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. இந்திய உணவுகளும் இதில் அடங்கியுள்ளதால், நம் நாட்டவர்களுக்கும் பயன்படுத்த மிகவும் சுலபமாக உள்ளது. தினமும் காலை முதல் இரவு வரை எடுத்துக் கொள்ளும் உணவுகளை பதிவு செய்வதன் மூலம், நம்முடைய உணவு பழக்கத்தில் எங்கே தவறு நடக்கிறது என்பதை தெளிவாக அறியலாம். இதில் பயனர் தங்களின் உடற்பயிற்சியையும் பதிவுசெய்யலாம். அதன் அடிப்படையில் எவ்வளவு கலோரி எரித்துள்ளது என்பதையும் செயலி கணக்கிட்டு காட்டும். இதனால், சாப்பிடும் கலோரி மற்றும் எரிக்கும் கலோரி ஆகியவற்றை ஒப்பிட்டு, எடை குறைப்புக்கோ, பராமரிப்புக்கோ தேவையான கட்டுப்பாட்டை எளிதில் செய்ய முடியும்.மேலும், தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையும் கண்காணிக்கும் வசதி இருப்பதால், நாள் முழுவதும் எவ்வளவு தண்ணீர் குடித்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.