குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: 350 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு!!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியர்களிடன் கூறியதாவது; முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 4ம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்துதுறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் போக்குவரத்து வசதிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், தற்காலிக பஸ் நிறுத்தம், குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட அதிகமான வாகன நிறுத்துமிடங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், பக்தர்களின் வசதிக்காக 350 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், வருகிற 2ம் தேதியும், 3ம் தேதியும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாட்களில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், ஏராளான குடிநீர் தொட்டிகளும், சுகாதார வளாகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை பராமரிக்க போதிய தூய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்படுவர். சுகாதாரத்துறை சார்பாக 3 மருத்துவ குழுவினர் 24மணி நேரமும் பணியில் இருப்பர். இதுதவிர நடமாடும் மருத்துவ குழுவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரைகளில் குளிக்கின்ற பக்தர்களின் பாதுகாப்புக்காக நீச்சல் வீரர்கள், கடற்கரை பாதுகாப்பு போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். முக்கிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் தீவிரமாக கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.