முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஆடி திருவிழா: நேர்த்திக்கடனாக குழந்தைகளை ஏலம் விடும் வினோத நிகழ்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நடந்த குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவுக்காக தேவாலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்ட ஆடு, கோழிகளை கொண்டு ஆயிரக்கணக்கானோருக்கு கம கம விருந்தும் பரிமாறப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுப்பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும். விழாவில் முக்கிய நிகழ்வாக குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா நடைபெற்றது. குழந்தை வரம் வேண்டி ஆலயத்தில் மனம் உருகி வேண்டுதல் வைத்த தம்பதியர் வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் குழந்தையை ஏலம் விட ஆலயத்திற்கு வந்து இருந்தனர். இந்த ஏலத்தில் குழந்தை உறவினர்களே குழந்தைகளை ஏலத்தில் எடுத்து மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கோயிலில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் ரூ.100 வரை ரூ.5,000 வரை ஏலம் போயின. ஏலத்தொகையை காணிக்கையாக தேவாலயத்திற்கு வழங்குகின்றனர். இதனிடையே காணிக்கையாக வழங்கப்பட்ட ஆடு, கோழி, அரிசி உள்ளிட்டவை கொண்டு விருந்து தயாரிக்கப்பட்டது. விருந்து தயாரிக்கும் பணியில் மத வேறுபாடுகளை கடந்து அனைத்து சமூக மக்களும் பங்கேற்கின்றனர். தேவாலய வளாகத்திலேயே 2,000 கிலோ ஆட்டு கறியுடன், 5,000 கோழி கறியுடன் 150 முட்டை அரிசி கொண்டு தயாரான விருந்து மாலை முதல் விடிய விடிய பக்தர்களுக்கு பரிமாற்றப்பட்டது. புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஆடி திருவிழா இன்று சப்பரபவனியுடன் நிறைவடைகிறது.