இசை ராஜாங்கம்
கடந்த அரை நூற்றாண்டில் திரையிசை உலகில் இளையராஜா தொட்டுள்ள உச்சங்களை, இந்தியாவில் வேறு எந்த இசைக்கலைஞரும் தொட்டதில்லை. 1970களில் தமிழ் சினிமாவுலகில் இந்தி திரைப்பட பாடல்களின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய காலக்கட்டத்தில், ‘அன்னக்கிளி உன்ன தேடுதே’ என்ற ஒரே பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் இளையராஜா.
தமிழ் சினிமாவுலகில் கதை, திரைக்கதை, இயக்கம் என்பதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, இளையராஜா இசை மட்டும் இடம் பெற்றால், படம் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையை அவர் விதைத்தார். இசைத்துறையில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கிய இளையராஜாவின் இசையானது, தமிழ் நிலப்பரப்போடு நேரடி பரிச்சயம் கொண்டதாகும். தமிழ் மண்ணில் ஒவ்வொரு மகிழ்ச்சியிலும், சோகத்திலும், நட்பிலும், பிரிவிலும், காதலிலும் இளையராஜாவின் இசை இரண்டற கலந்திருந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் 8 ஆயிரத்திற்கு 500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள அவரின் பொன்விழா ஆண்டினை இன்று உலகமே ெகாண்டாடி வருகிறது. வீரர்களையும் கலைஞர்களையும் ஊக்குவிப்பதில் எப்போதுமே முன்னிற்கும் தமிழ்நாடு அரசும் அவருக்கு இப்போது பாராட்டு விழா எடுத்துள்ளது. இவ்விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இசைஞானி இளையராஜா கலைத்தாய்க்கு மட்டுமல்ல, தமிழ்தாய்க்கும் சொந்தமானவர்’ என கூறியது சாலப்பொருந்தும்.
அதுமட்டுமின்றி, இசைத்துறையில் சாதிக்கும் இளைஞர்களுக்கு இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இளையராஜாவை கவுரவிப்பதோடு, இசைத்துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கும் நல்வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இசைஞானி இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்கிற தமிழக முதல்வரின் கோரிக்கையை, தமிழக மக்களின் கோரிக்கையாகவே நாம் பார்க்க வேண்டும்.
சினிமாத்துறைக்கும், அத்துறை சார்ந்த கலைஞர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிப்பதில் திமுக அரசுக்கு எப்போதுமே முக்கிய பங்குண்டு. தமிழ் சினிமா கலைஞர்களை ஊக்கப்படுத்தி விருதுகள் வழங்கி பாராட்டியவர் கலைஞர். இளையராஜாவிற்கு இசைஞானி என்கிற பட்டத்தை வழங்கி கிரீடம் சூட்டிய பெருமையும் அவருக்குண்டு. அவரது வழியில் இப்போதைய திராவிட மாடல் அரசும் கலைத்தாயின் புதல்வர்களையும், இலக்கியவாதிகளையும் கவுரவப்படுத்தி வருகிறது.
சிம்பொனி இசையமைத்துவிட்டு இளையராஜா சென்னை திரும்பியபோதும், அவருக்கு அரசு சார்பில் மரியாதை தரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது பொன்விழாவிற்கான பாராட்டு விழாவையும் அரசு நடத்தி பெருமை சேர்த்துள்ளது. இளையராஜா மட்டும் இசையமைத்து இருந்தால், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களும் நமக்கு மனப்பாடம் ஆகியிருக்கும் என்கிற குறை தமிழ் நெஞ்சங்களில் காணப்படுகிறது.
எனவே சங்க தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் இளையராஜா இசை அமைத்திட வேண்டும் என தமிழக முதல்வரின் கோரிக்கையை இளையராஜா பரிசீலிக்க வேண்டும். இசை ஆளுமையும், தமிழ் புலமையும் கொண்ட அவரால் மட்டுமே இத்தகைய செயற்கறிய செயல்களை செய்வது சாத்தியமாகும். மண்ணின் இசையையும், மக்கள் இசையையும் ஒரு சேர கடத்தும் இளையராஜாவிற்கு இத்தகைய விருதுகளும், பாராட்டுகளும் பெருமை சேர்ப்பவையாகும். தமிழ் மண்ணில் இசை பிரவாகம் பெருக்கெடுத்து ஓடட்டும்.