இசையமைப்பாளர் இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் எவ்வளவு? சோனி நிறுவனம் விவரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடட் நிறுவனம், எக்கோ ரெகார்டிங் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், சோனி நிறுவனம் மற்றும் அதன் சமூக வலைதள பக்கங்களில் என்னுடைய பாடல்களை என்னுடைய அனுமதி இல்லாமல் பல்வேறு வடிவங்களில் அதனை மாற்றி பயன்படுத்தி வருகிறது.
சோனி நிறுவனம் எக்கோ நிறுவனத்திடம் இருந்து பாடல்களை வாங்கியதாக கூறினாலும், அதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மதிக்காமல் அதனை சார்ந்த நிறுவனங்கள் என்னுடைய பாடல் படைப்புகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருகிறார்கள். காப்புரிமைச் சட்டத்தின்படி எனது இசையின் முதல் உரிமை படைப்பாளியான எனக்கே உள்ளது.
நான் பாடல்களின் உரிமையை யாருக்கும் வழங்கவில்லை. எந்த உரிமைகளையும் மாற்றித் தரவும் இல்லை. எனவே, சோனி நிறுவனம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் என்னுடைய பாடல்கள் மற்றும் அது தொடர்பான விவரங்களை மாற்றி அமைக்கவோ அதனை கொண்டு இசைகள் கோர்வைகளை செய்யவோ தடை விதிக்க தடை வேண்டும்.
எனது பாடல்களை பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருவாய் விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், மனுதாரர் இளையராஜாவின் பாடல்களை சோனி நிறுவனம் தவறாக பயன்படுத்தி வருமானம் ஈட்டி வருகிறது.
எனவே, இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை வணிகரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் குறித்த விவரங்கள், வரவு செலவுகளை தாக்கல் செய்யுமாறு சோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.