இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி காவல்துறையின் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் இசிஆரில் நடத்தவுள்ள இசை நிகழ்ச்சியை காவல்துறையின் நிபந்தனைகளை கடைபிடித்து நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்துாரில், ‘மார்க் சொர்ணபூமி’ எனும் இடத்தில், ‘ஹுக்கும்’ என்ற பெயரில், இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், செய்யூர் தொகுதி வி.சி.க., எம்.எல்.ஏ., பனையூர் பாபு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி ஆஜராகி கடந்த 2023ம் ஆண்டு, பனையூரில் நடந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் முதல்வர் வாகனம் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில், லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றதில், நெரிசல் ஏற்பட்டது.
இசையமைப்பாளர் அனிருத் நிகழ்ச்சிக்கு, எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. முறையாக அனுமதிகள் வழங்கியதாக தெரியவில்லை. நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு செல்லும் சாலை குறுகலாக உள்ளது. சாலையை வாகனங்கள் நிறுத்தமிடமாகப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால், முழுமையான பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் வரை நிகழ்ச்சியை ரத்து செய்ய அல்லது தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, இசை நிகழ்ச்சிக்கு, பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் வழக்கறிஞர் பி.வி.பாலசுப்பிரமணியன் ஆஜராகி, காவல்துறை விதித்த நிபந்தனைகள் பின்பற்றியே நிகழ்ச்சி நடத்தப்படும். உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்றார்.
இதை கேட்ட நீதிபதி, கடந்த 2023ல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் நடந்தவை திரும்ப நடக்கக் கூடாது. காவல் துறையினரின் நிபந்தனைகளை கண்டிப்புடன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டும். மேலும், நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.