இசை நிகழ்ச்சியில் தற்செயலாக எடுக்கப்பட்ட வீடியோ: ஆஸ்ட்ரோனோமர் நிறுவன சி.இ.ஓ. ஆண்டி பைரன் ராஜினாமா
வாஷிங்டன்: அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் தற்செயலாக எடுக்கப்பட்ட வீடியோ ஒரு பெரும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் வாழ்க்கையையே மோசமாக புரட்டிப்போட்டது. ரூ.250 கோடியை இழக்கும் நிலைக்கும் அவர் தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மாசாசூசெட் மாகாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் கிரிஸ் மார்ட்டின் பாடிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஜோடி ஒன்று கட்டி அணைத்தபடி இருந்தது பெரிய திரையில் காட்டப்பட்டது. இந்த வீடியோ வேகமாக வைரலான நிலையில் அதில் இருப்பவர்கள் யார் என தோண்டி துவங்கிய நெட்டிசன்கள் அவர்களின் அடையாளங்களை வெளியிட்டனர்.
ஆஸ்ட்ரோனோமர் என்ற மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆண்டி பைரன் தனது நிறுவனத்தில் பணியாற்றும் எச்.ஆர் கிறிஸ்டி கபோட்டை கட்டி அணைத்து கொண்டிருந்தது தெரியவந்தது. ஆண்டி பைரன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார் என்ற தகவலும் வைரலாக பரவியது. இருவரையும் கட்டாய விடுப்பில் செல்ல அந்நிறுவனம் அறிவுறுத்திய நிலையில் ஆண்டி பைரன் தனது பதவியையே ராஜினாமா செய்தார். கிறிஸ்டி கபோட் தனது லின்குடின் கணக்கில் ஆஸ்ட்ரோனோமர் பெயரை நீக்கினார். இந்த விவகாரம் இருவரது தரப்பிலும் புயலை கிளப்பிய தருணத்தில் இதற்கு காரணமே பாடகர் கிரிஸ் மரட்டின்தான் என கூறி பலரும் மற்றொரு விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த கிரிஸ் ரசிகர்களை நோக்கி கேமரா செல்ல போகிறது என கூறிய சில வினாடிகளில் தற்செயலாகவே அந்த காட்சியில் ஆண்டி பைரன், கிறிஸ்டி கபோட் தோன்றினர். கிறிஸ்டி கபோட் 2022ல் விவாகரத்து ஆகி 2வது திருமணம் செய்து கொண்டார் என கூறப்படுகிறது. பைரைவட்டர் ரம் என்ற பழமையான மதுபான நிறுவனத்தின் உரிமையாளரும், பெரும் பணக்காரருமான ஆண்ட்ரு கபோட்டே, கிறிஸ்டி கபோட்டின் கணவர் என்பதும் பேசுபொருளாகி உள்ளது. அதே நேரத்தில் ஆண்டி பைரனுக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகும் சூழல் உள்ளது அவ்வாறு இருவரும் பிரிந்தால் தனது சொத்தில் ரூ.250 கோடியை மனைவிக்கு அளிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆண்டி பைரன் தள்ளப்பட்டுள்ளார்.