முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்
திருச்சி: திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆர்.எஸ்.எஸ்சை பொறுத்தவரை அவர்களுக்கு அரசியல் என்பது சாதி மதம், சாமி. அவர்களுக்கு மக்களைப்பற்றி யோசிக்க நேரம் இருக்காது. பாஜவுக்கும், ஆர்எஸ்எஸ்சுக்கும் ஏன் திடீரென முருகன் மீது பக்தி வந்தது. இதற்கு காரணம் 2 மாதங்களில் தேர்தல் வருவதால் சேட்டை செய்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்ற வில்லை என கவலைப்படும் பாஜவுக்கு அவர்கள் போற்றும் இந்து மக்கள் பல பேர் வீட்டில் விளக்கு எரியாமல் பசி, பட்டினியில் வாடுகின்றனர். அதை கருத்தில் கொள்ள அவர்களுக்கு நேரமில்லை. முருகன் இந்து கடவுளா, சைவ கடவுளா, கடவுள்களை மதமாக்கி அரசியல் செய்து வருகின்றனர். முதலில் அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் செய்தார்கள், கோயில் கட்டி முடித்தவுடன் அது முற்றுப்பெற்றது.
அது தான் சத்தியம். அதோடு அயோத்தியிலேயே பாஜ தோல்வியும் கண்டது. பின்னர் ஜெகநாதர், தொடர்ந்து ஐயப்பனை எடுத்தீர்கள் ஆனால் வேலை நடக்கவில்லை, தற்போது முருகன். முருகர் மீது உண்மையான பக்தி இருந்திருந்தால் கடந்த ஆண்டு முருகர் மாநாடு நடத்தி இருக்கும்போதே தீபத்தூணில் தீபம் ஏற்றி இருக்கலாமே ஏன் அதை செய்யவில்லை.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஐயா கூறியது தவறு என நான் நினைக்கிறேன். மதத்தை போற்றாமல் மனிதத்தை போற்ற வேண்டும் என நாங்கள் கூறுகிறோம். மதத்தை போற்றுவதே ஒரு கட்சியின் கோட்பாடாக இருந்தால் எவ்வாறு அந்த கட்சியை நாம் வரவேற்பது. நாட்டில் தீர்க்க எவ்வளவோ பிரச்னைகள் இருந்தும் இதை ஒரு பிரச்னையாக பேசிக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானதாக நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.