முருகன் கோயில்களில் வைகாசி விசாகம் கோலாகலம்.. பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்..!!
இத்திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நள்ளிரவு 1 மணியளவில் நடை திறக்கப்பட்டது. இத்திருவிழாவை முன்னிட்டு தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அலகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் நேர்த்தி கடன்களை செலுத்தினர். மேலும், அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். இதனால், திருசெந்தூரில் திருவிழா களைகட்டியுள்ளது.
அதேபோல் சென்னை வடபழனியில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருக பெருமானை வழிபட்டனர். இன்றைய தினம் வைகாசி விசாகம் முருகனின் பிறந்தநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு முருகன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காலை முதலே காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். இதனால், வடபழனி முருகன் கோயிலில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.