இரும்பு ராடால் அடித்து எலக்ட்ரீஷியன் கொலை: மனைவி, கள்ளக்காதலன் சிக்கினர்
ஏற்காடு: ஏற்காட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில், எலக்ட்ரீஷியன் இரும்பு ராடால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரைகாடு புத்தூர் மோட்டுகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (36). இவரது மனைவி ராமாயி (28). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். சிவக்குமார் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் வீட்டுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை சேலத்திற்கு சென்று வாங்கி வருவது வழக்கம்.
அதேபோல் நேற்று மாலை, தனது பைக்கில் சேலம் சென்ற சிவக்குமார், மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
இரவு 10 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியான, வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் பகுதியில் இவர், பைக்குடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அந்த வழியாக வந்த பொதுமக்கள், சிவக்குமாரை மீட்டு, வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த சிவகுமாரின் உறவினர்கள், அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறினார். அதைதொடர்ந்து, இன்று அதிகாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். உறவினர்கள் தரப்பில், சிவக்குமாரின் மனைவி ராமாயி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய ராமாயிக்கும், அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனை ஊர் பஞ்சாயத்தில் பேசியுள்ளனர். பிறகு, ஏற்காடு காவல்நிலையம் வரை பிரச்னை சென்றது. அப்போது போலீசாரிடம், ‘இனி அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன்’ என ராமாயி உறுதியளித்ததை தொடர்ந்து தம்பதியினரை சமாதானம் செய்து, குடும்பம் நடத்துமாறு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ராமாயிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், அவர் கடைசியாக செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், ராமாயி ஏற்காட்டை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் செல்போனில் பேசியது தெரியவந்துள்ளது. அந்த நபரிடமே அடிக்கடி பேசியிருந்ததும் செல்போனை ஆய்வு செய்ததில் தெரிந்தது. மேலும், கடைசியாக அந்த வாலிபரின் செல்போன் எண்ணுக்கு தான் அவர் பேசியுள்ளார். அதனால், போலீஸ் பிடி அவரது மனைவி மீது இறுகியது.
சிவக்குமார் விபத்தில் சிக்கியிருந்தால், பைக் சேதமாகி இருக்கும். ஆனால், பைக்கில் ஒரு கீறல் கூட இல்லை. இதனால் திட்டுமிட்டு சிவக்குமாரை தலையில் இரும்பு ராடால் கொண்டு தாக்கியுள்ளனர். கொலையான இடத்தில் அவரது மூளை சிதறி வெளியே கிடந்தது. அதன்மூலம் தலையில் மட்டும் தாக்கி சிதைத்துள்ளனர். மற்ற இடங்களில் எந்த காயமும் இல்லை. இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் சிவக்குமாரை கொலை செய்தது உறுதியானது. தொடர்ந்து ராமாயிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஏற்காடு மதுராயன்காடு பகுதியை சேர்ந்த அவரது கள்ளக்காதலன் சந்தோஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்றொரு வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், ராமாயி கொடுத்த தகவலின் பேரில் சந்தோஷ் தனது நண்பருடன் சேர்ந்து சிவக்குமாரை இரும்பு ராடால் தாக்கி கொன்றிருப்பது தெரிந்துள்ளது. அதுதொடர்பாக 3 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரும்பு ராடால் தாக்கு
சிவக்குமார் கொலையான இடத்துக்கு அருகில் இரும்பு ராடு ஒன்று கிடந்தது. போலீசார் அதை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு மழை பெய்ததால், அதில் படிந்த ரத்தக்கறை நீங்கியுள்ளது. மேலும், வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது மறைந்திருந்து சிவக்குமாரை தாக்கியுள்ளனர். இதனால் வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சிவக்குமார், சுமார் 30 அடி தூரம் சென்று கீழே சரிந்துள்ளார்.
செல்போனில் தகவல் பரிமாற்றம்
தனது கணவர் சிவக்குமார், சேலத்திற்கு கடைக்கு சென்று திரும்பும் தகவலை ராமாயி, கள்ளக்காதலன் சந்தோசுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இரவு திரும்புவார், எந்த வழியில் வருவார் உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக கொடுத்துள்ளார். அதனால், சந்தோஷ் திட்டமிட்டு சிவக்குமாரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.