மூணாறில் சிவப்பு வண்ணத்தில் பூத்துக் குலுங்குது... கொசுக்களை கொல்லும் மலேரியா மரங்கள்: அரிய வகை மரத்தை பாதுகாக்க கோரிக்கை
மூணாறு: மூணாறில் கொசுக்களை கொல்லும் அரிய வகை மலேரியா மரங்களை பாதுகாக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. நாடு விடுதலையாவதற்கு முன், இந்த தோட்டங்களை ஆங்கிலேயர்கள் நிர்வகித்து வந்தனர்.
அப்போது தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கொசுக்கள் மூலம் பரவும் மலேரியா காய்ச்சலுக்கு பலியாயினர். இதை தடுக்க நினைத்த ஆங்கிலேயர்கள், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கொசுக்களை அழிக்கும் திறன் கொண்ட ‘ஸ்பார்தோடியா’ என்னும் மரக்கன்றுகளை மூணாறு மற்றும் அதனை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் நட்டு வைத்தனர்.
இந்த மரங்களில் பறவை வடிவில் சிவப்பு நிறங்களில் பூக்கும் பூக்கள், கொசுக்களை ஈர்க்கும் தன்மை கொண்டவை. இவ்வாறு ஈர்க்கப்படும் கொசுக்கள் பூக்களில் சுரக்கும் பசை போன்ற, ஒரு வித திரவத்தில் சிக்கி அழியும். கொசுக்கள் அழிக்கப்பட்டதால், அவைகளை மலேரியா மரங்கள் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அழைத்தனர்.
தற்போது மூணாறு அருகே வாகுவாரை எஸ்டேட் பகுதியில் பசுமையான தேயிலை தோட்டங்களில் மத்தியில் ஆங்காங்கே உள்ள ‘ஸ்பார்தோடியா’ என்னும் மலேரியா மரங்களில் சிவப்பு வண்ணத்தில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. மூணாறை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் இந்த படம் பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். அழிந்து வரும் இந்த அரிய வகை மரங்களை அரசு பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.