நகராட்சி ஆணையருடன் பள்ளிபாளையம் வார்டுகளில் நகரமன்ற தலைவர் ஆய்வு
*அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அறிவுறுத்தல்
பள்ளிபாளையம் : நகராட்சி ஆணையருடன், நகராட்சி தலைவர் மக்கள் தெரிவித்த அடிப்படை பிரச்னைகளை உடனே நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டது. பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் தயாளன், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்களுடன் நகரமன்ற தலைவர் டூவீலரில் நகர் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். சிறு சிறு சந்துகள், வீதிகளிலும் நகரமன்ற நிர்வாகிகள் சென்றனர்.
பெரியார்நகர், ஆவாரங்காடு, காந்திபுரம், நேருநகர், ஆண்டிகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாலையில் சென்று அப்பகுதியினர் தெரிவித்த குறைகளை கேட்டறிந்தார். இதில், சாக்கடை அடைப்புகள், குடிநீர் கசிவு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை பணியாளர்கள் உடனடியாக சரி செய்தனர். வீதிகளில் தேங்கி கிடந்த குப்பைகள், கழிவுகள் அனைத்தும் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டது. குடிநீர், சாக்கடை, குப்பை போன்ற அடிப்படை பிரச்னைகளை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என நகராட்சி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.